ஒருதலை காதலால் விபரீதம் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணுக்கு கத்திக்குத்து: தப்பி ஓடிய வாலிபருக்கு வலை

" alt="" aria-hidden="true" />


சென்னை:


மூன்று ஆண்டுகளாக பின் தொடர்ந்து ஒருதலையாக காதலித்தும் தன் காதலை ஏற்காத இளம்பெண்ணை, அவரது வீட்டிற்குள் புகுந்து, வாலிபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் திருவல்லிக்கேணியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகரை சேர்ந்தவர் பாபு (24). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக திருவல்லிக்கேணி மாயாண்டி காலனியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே பாபு தனது காதலை இளம்பெண்ணிடம் பலமுறை கூறி, திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் இந்த இளம்பெண் அதை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், பாபுவை கடுமையாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த இளம்பெண் நேற்று மதியம் 2.30 மணிக்கு தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த பாபு, அந்த வீட்டிற்குள் புகுந்து ‘‘என்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா?, முடியாதா?’’ என்று கேட்டுள்ளார்.

அப்போது இளம்பெண் ‘‘நீ வீட்டை விட்டு வெளியே போகவில்லை என்றால் சத்தம் போட்டு ஊரை கூட்டுவேன்,’’ என்று கூறியபடி சத்தம் போட்டுள்ளார். இதனால் அத்திரமடைந்த பாபு, மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் இடது கை, வலது கை, கால், கழுத்து, தலை என பல இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் வலி தங்க முடியாமல் இளம்பெண் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்த பாபு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து பொதுமக்கள் ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டு ராயப்ேபட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இளம்பெண் கொடுத்த புகாரின்படி போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தப்பி ஓடிய பாபுவை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் திருவல்லிக்கேணியில் பரபரப்பு ஏற்பட்டது.